திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம், தண்டீஸ்வரம் என்னும் ஐந்து சிவாலயங்கள் இலங்கையின் 'பஞ்ச சிவஸ்தலங்கள்' என்று வணங்கப்படுகின்றன. திருக்கோணேஸ்வரம் இலங்கையின் பழமையான ஆலயங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இக்கோயில் கி.மு. 1300 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோயில் 'தட்சிண கயிலாயம்' என்றும் அழைக்கப்படுகிறது.
கி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துகீசியர் படையெடுப்பின்போது இக்கோயில் அழிக்கப்பட்டது. பின்னர் 1950 ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்டது. புதிய விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு மீண்டும் தொடங்கப்பட்டது. மூலவரும், அம்பிகையும் சிறிய அழகிய வடிவினராகக் காட்சித் தருகின்றனர். உற்சவ மூர்த்திகளும் மிக அழகாக உள்ளனர். இக்கோயில் உள்ள மலையைச் சுற்றி மூன்று பக்கமும் கடல் பரந்து விரிந்துக் காணப்படுகிறது.
போர்த்துகீசியர் படையெடுத்தபோது கோயிலில் இருந்த விக்கிரகங்களை அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக அருகிலுள்ள கிராமமான 'தம்பலகாமம்' கிராமத்திற்குக் கொண்டு சென்று பாதுகாத்தனர். பின்னர் அங்கேயே ஒரு கோயிலை அமைத்து மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அதனால் இக்கோயில் 'ஆதி கோணேஸ்வரம்' என்று அழைக்கப்படுகிறது.
கோயிலுக்கு செல்லும் வழியில் கோயிலின் அருகே உள்ள பாறையில் ஒரு வெட்டு காணப்படுகிறது. இது இராவணன் தனது அன்னை அரண்மனையில் இருந்து கோணேஸ்வரரை தரிசிப்பதற்கு வசதியாக தனது வாளினால் பாறையைப் பிளந்ததாகக் கூறப்படுகிறது.
கோயிலின் வாசல் அருகே சுமார் 20 அடி உயரமுள்ள சிவபெருமான் சிலை புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே சுற்றி வந்து மூலவர் சன்னதி எதிரில் உள்ள வழியாக வெளியே சென்றால் அங்கு திருஞானசம்பந்தர், சிவபெருமான் காலனை உதைத்தல், பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட லீலை, சிவபெருமான் கைலாயக் காட்சி, இராவணன் போன்ற சுதைச் சிற்பங்கள் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன.
பங்குனி மாதம் பிரம்மோற்சவம் பதினெட்டு நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இவர் இராமேஸ்வரத்திலிருந்தே இப்பதிகத்தைப் பாடியதாகக் கூறுவர். அருணகிரிநாதரும் இக்கோயில் முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார். காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.
|